ஹட்டன்–டிக்கோயாவில் வயோதிப தம்பதியினர் கொடூரமாக கொலை.

 


ஹட்டன்–டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த தம்பதியினரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய தம்பதியினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீண்டகாலமாக அந்த வர்த்தக நிலையத்தை நடத்தி வந்த நிலையில், அண்மையில் கடையை மூடிவிட்டு அதே இடத்தில் தனியாக வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களின் பிள்ளைகள் கொழும்பில் வசித்து வருகின்றனர்.

சம்பவத்திற்கு முன்னர் பிள்ளைகள் தொலைபேசியில் தொடர்புகொண்ட போதிலும் பதில் அளிக்கப்படாததால், அயலவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்திற்குள் இனந்தெரியாத நபர்கள் புகுந்து இந்த கொலை சம்பவத்தை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் ஹட்டன் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.