ஈரானுடன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில், திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், “நாளை ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை முன்னெடுக்க வேண்டாம் என அமெரிக்க இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன். ஆனால், ஏற்றுக்கொள்ளக்கூடிய உடன்படிக்கையொன்று எட்டப்படாவிட்டால், உடனடி அறிவிப்பின் பேரில் முழுமையான மற்றும் பாரியளவிலான தாக்குதலை நடத்தத் தயாராக இருக்குமாறும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், ட்ரம்ப் இதற்கு முன்னரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
அதேவேளை, உடன்படிக்கை தோல்வியடைந்தால் ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
ட்ரம்பின் சமூக ஊடகப் பதிவின்படி, Qatar, Saudi Arabia மற்றும் United Arab Emirates ஆகிய நாடுகளின் தலைவர்கள், தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மட்டுமன்றி மத்திய கிழக்கு மற்றும் உலக நாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை பேச்சுவார்த்தை மூலம் எட்ட முடியும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் உடன்படிக்கையின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
