முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கின் ஹஜ் பெருநாள் வாழ்த்து.




 முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ்வின் மீது இப்ராஹீம் நபி கொண்டிருந்த பக்தி, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை நினைவுகூரும் ஹஜ் பெருநாள், இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் யாத்திரையுடன் இணைந்திருப்பதால் தனித்துவமான முக்கியத்துவம் பெறுகின்றது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (28) உலக முஸ்லிம்கள் கொண்டாடும் புனித ஈதுல் அழ்ஹா (ஹஜ் பெருநாள்) முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலகம் பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்நோக்கி வரும் நிலையில், மனிதர்களுக்கிடையிலான ஒற்றுமை, பிணைப்பு மற்றும் சகோதரத்துவத்தின் அவசியத்தை ஹஜ் பெருநாள் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் முஸ்லிம்கள், தனிப்பட்ட அந்தஸ்து வேறுபாடுகளை மீறி ஒன்றிணைந்து மத வழிபாடுகளில் ஈடுபடுவது, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக உலகிற்கு அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், மக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்கள், இப்ராஹீம் நபியின் தியாகத்தையும் இறைநம்பிக்கையையும் உலகிற்கு மீண்டும் எடுத்துக்காட்டுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயநலத்தை விட பொதுநலன் மேலோங்கும், அமைதி மற்றும் ஒற்றுமை நிலவும் மனித சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என தெரிவித்த ஜனாதிபதி, ஹஜ் பெருநாள் எடுத்துரைக்கும் தியாகம், அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் பண்புகளை அனைவரும் தமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

அதேநேரம், ஆன்மீக விழுமியங்களால் பலப்படுத்தப்பட்ட, அனைவருக்கும் சம வாய்ப்புகள் கொண்ட அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்க சகலரும் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும் என்றும், இந்நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு தனது இனிய ஈதுல் அழ்ஹா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.