போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் புதிய சிக்கல்கள்.



 அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்னர் இன்னும் சில சிக்கலான விடயங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளதாக அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், 60 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீடிப்பதுடன், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் எதிர்காலம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகளுக்கும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் தலைவர்களின் இறுதி அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில், இரு தரப்பும் ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்ட வரைவை ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த ஒப்பந்தம் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவோ அல்லது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவோ இல்லை என ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பேச்சுவார்த்தையாளர்கள் பல முக்கிய விடயங்கள் குறித்து தொடர்ந்து கலந்துரையாடி வருவதுடன், குறிப்பாக யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான விவகாரம் முக்கிய கவனத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜே.டி. வான்ஸ், “ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், ஒரு தீர்வை எட்டுவதற்கு இரு தரப்பும் மிகவும் நெருக்கமாக உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அதிகளவில் செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும், தற்போதுள்ள கையிருப்புகளை அகற்ற வேண்டும் என்றும் அமெரிக்கா நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.

அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கோட்பாட்டு ரீதியாக அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படக்கூடியது என்பதால், இந்த விவகாரம் உலகளாவிய பாதுகாப்பு கவலையாக மாறியுள்ளது.