மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணியாக நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்று ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்த தென்னாப்பிரிக்கா அணிக்காக கேப்டன் லாரா வால்வார்டுட் 69 ரன்கள், அன்னேகே போஸ்க் 91 ரன்கள் மற்றும் சோலே டிரயன் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் பிரீஆர்னி லிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
347 ரன்கள் என்ற கடின இலக்குடன் பதிலடி ஆடிய நியூசிலாந்து அணியில், கேப்டன் அமீலா கெர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு துணையாக லஜி கேஜ் முக்கிய பங்களிப்பு செய்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை சேஸ் செய்த அணியாக புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு இந்தியா மகளிர் கிரிக்கெட் அணி 341 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை தற்போது நியூசிலாந்து அணி முறியடித்துள்ளது.
இந்தப் போட்டியில் அமீலா கெர் 139 பந்துகளில் 23 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 179 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். லஜி கேஜ் 68 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியுடன், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையை பெற்றுள்ளன.
