ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் இணைய மோசடி – லட்சக்கணக்கான ரூபாய் பறிப்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் இணைய மோசடி – லட்சக்கணக்கான ரூபாய் பறிப்பு




SriLankan Airlines நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி இணையதளங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் முன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் முக்கிய தகவல்களை சமர்ப்பித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, பமுணுகம பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 55 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், கடவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 3.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம், இதே போலி இணையதளம் மூலம் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தகவல்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம், இந்த திட்டமிட்ட குற்றச்செயல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து தகவல்களை உடனுக்குடன் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள், நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை உறுதிப்படுத்தாமல் தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கி விவரங்களை பகிர வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.