டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை கைது செய்ய அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளின் போது, இலங்கையைச் சேர்ந்த பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் இடம்பெறும் பல குற்றச் செயல்கள், டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் இலங்கை குற்றவாளிகளால் வழிநடத்தப்படுவதாக பாதுகாப்புப் படையினர் கண்டறிந்துள்ளனர். மேலும், அவர்கள் ஈரான் நாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நேரடி தொடர்புகளை பேணி, இலங்கைக்கு போதைப்பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக கடந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தற்போது ஈரான் தொடர்பான பிராந்திய பதற்றநிலை காரணமாக, மத்திய கிழக்கு நாடுகள் ஈரானிய குற்றவாளிகளுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிய விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இதன் விளைவாக, இலங்கையைச் சேர்ந்த பல முக்கிய குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் படுவத்தே சாமர, மோதர நிபுன, பரேவி சுதா உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அவை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சில குற்றவாளிகள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக, ‘கரந்தெனிய சுத்தா’வின் சகோதரரான ‘ராஜூ’ என்பவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை (17) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காலி மாவட்டம் குற்றத்தடுப்புப் பிரிவினரால், ‘கரந்தெனிய சுத்தா’வுடன் தொடர்பு வைத்திருந்த 30 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 35 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 99 கிராமுக்கும் அதிகமான தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவரை ‘கரந்தெனிய சுத்தா’ கொலை செய்த பின்னரும், அவர் உடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள், தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் அவர்களின் மேற்பார்வையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
