பிற்பகல் பல பகுதிகளில் இடியுடன் மழை – பலத்த காற்று, மின்னல் அபாயம் எச்சரிக்கை

 



வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், மேலும் குருணாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தென் மாகாணத்தின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், குறிப்பாக குருணாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில், அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடற்பரப்புகளுக்கும் எச்சரிக்கை

காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரை உள்ள கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றின் வேகம் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 25–35 கி.மீ வரை வீசக்கூடும். குறிப்பாக புத்தளம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்பரப்புகளில், காற்றின் வேகம் மணிக்கு 45 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அந்தப் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை நேரங்களில் கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.