சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை, சுமார் 2,000 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் போது 12,000க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.
சுகாதார விதிமுறைகளை மீறி உணவுப் பொருட்கள் விற்பனை செய்தமை, மேலும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழேயே இந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறான விசேட சுற்றிவளைப்புகள் எதிர்வரும் வசாக் மற்றும் பொசன் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவுகளைப் பெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
