புத்தாண்டு கால விபத்துக்கள்: விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி 80க்கும் மேற்பட்டோர் பலி!




புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் இடம்பெற்ற வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களால் 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக Sri Lanka Police தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பதிவான சம்பவங்களின் அடிப்படையில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் நடந்த வீதி விபத்துகளின் காரணமாக மட்டும் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறிப்பாக ஏப்ரல் 10 மற்றும் 13 ஆகிய நாட்களில் அதிகளவிலான விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நீரில் மூழ்கிய சம்பவங்களும் கவலைக்கிடமான அளவில் பதிவாகியுள்ளன. அந்த வகையில், இந்தக் காலப்பகுதியில் மட்டும் 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு புத்தாண்டு காலத்தில் விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால், பொதுமக்கள் பயணிக்கும் போது பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கவும், நீர்நிலைகளில் நீராடும் போது கூடுதல் கவனம் செலுத்தவும் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.