மட்டக்குளி – கெமுனுபுர பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 9 பேரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 31ஆம் திகதி, இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, சிலர் சம்பந்தப்பட்ட நபரின் இல்லத்துக்குச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் கடுமையாக காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த மட்டக்குளி பொலிஸார், நேற்று (2) சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 40 வயதுக்குள் உள்ள மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
