கைது செய்யப்பட்ட 22 தேரர்களில் 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி

 



கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்யில் 112 கிலோகிராம் ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களில் 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி, தாய்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பியபோது இந்த 22 தேரர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவர்கள், நேற்று சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் கஞ்சா ரக போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜம்புரலிய பகுதியில் உள்ள விகாரையொன்றைச் சேர்ந்த மூன்று தேரர்கள் மட்டுமே இதற்கு முன்னர் தாய்லாந்துக்குச் சென்றிருந்ததாகவும், அப்போது அவர்களுடன் இணைந்து 12 தேரர்கள் அந்தப் பயணத்தில் பங்கேற்றிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த நேரத்தில் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருட்கள் அத்துருகிரிய பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் மே மாதத்தில் மேலும் 40 தேரர்களை தாய்லாந்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த வலையமைப்பை இலங்கையிலிருந்து இயக்கியதாகக் கூறப்படும் ‘அமிதாந்த’ என்ற தேரர், கம்பஹா பகுதியில் உள்ள விகாரையொன்றில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய தேரர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்ததாகவும், கைது செய்யப்படும் போது அவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை இலங்கையில் வர்த்தகர்கள் போன்று தோற்றமளிக்கும் இருவர் பின்னணியிலிருந்து வழிநடத்தி வந்ததாகவும், அவர்களில் ஒருவர் ‘ஹாஜி’ என அழைக்கப்படுபவர் எனவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.