எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக சட்டவிரோதமாக QR குறியீடுகளைப் பதிவிறக்கம் செய்த 153 கையடக்க தொலைபேசி எண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக இது தொடர்பான தகவல்கள் பொலிஸாாருக்கும் குற்றப் புலனாய்வுத் துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டவிரோதமாக 79 இடங்களில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை ஓரளவிற்குப் பராமரிக்கக் கிடைக்கும் எரிபொருளை, ஒருவர் தீய நோக்கத்துடன் பதுக்கினால், அது பாதிப்பை ஏற்படுத்தும்.
இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அரசாங்கம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.தீய நோக்கத்துடன் எரிபொருளைப் பதுக்குவது உங்களுக்கு எந்த நன்மையையும் தராது. அத்தகைய நபர்கள் மீது சட்டம் நிச்சயமாக அமல்படுத்தப்படும்.
சட்டவிரோத செயல்களை ஆதரிக்கவோ, உதவவோ, துணைபுரியவோ வேண்டாம். இது போன்ற நெருக்கடியான காலங்களில், எல்லா இடங்களிலும் கள்ளச் சந்தைகள் உருவாகின்றன.
இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தகவல் தெரிந்தால், உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
