உலகப் பொருளாதாரம் பாரியளவில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச எரிசக்தி முகவர் நிறுவனத்தின் (IEA) நிறைவேற்றுப் பணிப்பாளர் பாத்திஹ் பிரோல் (Fatih Birol) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து அவர் இவ்வாறு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய நிலையை 1970-களின் எரிசக்தி நெருக்கடிகளுடனும், 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது மேற்கொண்ட படையெடுப்பின் தாக்கத்துடனும் அவர் ஒப்பீடு செய்துள்ளார். தற்போதைய நிலைமையானது, இரண்டு எண்ணெய் நெருக்கடிகளும் ஒரு எரிவாயு சரிவும் ஒன்றாக இணைந்தது போன்றது என பிரோல் அவுஸ்திரேலியாவில் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
உலகப் பொருளாதாரம் இன்று ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடி இதே திசையில் தொடர்ந்தால், எந்தவொரு நாடும் இதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது. எனவே, இந்தப் பிரச்சினையை தீர்க்க ஒரு உலகளாவிய கூட்டு முயற்சி அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் காரணமாக அந்தப் பிராந்தியத்தில் குறைந்தது 40 எரிசக்தி சொத்துக்கள் கடுமையாக அல்லது மிகக் கடுமையாக சேதமடைந்துள்ளதாக பிரோல் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, ஆசிய மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால், கையிருப்பிலுள்ள எண்ணெயை மேலதிகமாக வெளியிடத் தயாராக உள்ளோம். சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து, உறுப்பு நாடுகளுடன் ஆலோசித்து இதற்கான முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச எரிசக்தி முகவர் நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் தமது மூலோபாய கையிருப்பிலிருந்து சாதனை அளவாக 400 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வெளியிட ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
