இலங்கையின் பல பகுதிகளில் இன்று (28) மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை கவலைக்கிடமான அளவிற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில், வெப்ப உணர்வு 39°C முதல் 45°C வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட வகைப்படுத்தலின்படி, 39°C முதல் 45°C வரை உள்ள வெப்பநிலை “அவதானம் தேவைப்படும்” நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை விட அதிகமாக 46°C முதல் 52°C வரை சென்றால் “அதிக அவதானம்” என்றும், 52°C-ஐ கடந்தால் “ஆபத்தான நிலை” என்றும் கருதப்படுகிறது.
நேற்று (27) அதிகபட்ச வெப்பநிலை 37.8°C ஆக குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
இந்த கடும் வெப்பம் காரணமாக, குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதார சிக்கல்களை சந்திக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் நீர்ச்சத்து குறைதல், வெப்பத்தாக்கம் போன்ற பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்க்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியே செல்லும் போது பாதுகாப்பான ஆடை, தொப்பி மற்றும் வெயில் கண்ணாடி பயன்படுத்துவது நல்லது. மேலும் உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும்.
எந்தவொரு மயக்கம், அதிக வியர்வை அல்லது தளர்ச்சி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஓய்வெடுத்து, தேவையானால் மருத்துவ ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
