உலக எரிபொருள் விலை உயர்வு இலங்கையையும் பாதிக்கும்... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

உலக எரிபொருள் விலை உயர்வு இலங்கையையும் பாதிக்கும்...




உலக சந்தையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் குறையும் போது ஏற்படும் விலை அதிகரிப்பானது இலங்கையையும் பாதிக்கும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை இலங்கையை மாத்திரமன்றி முழு உலகையும் பாதித்துள்ளது. குறிப்பாக, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்காகப் பயன்படுத்தப்படும் கப்பல் போக்குவரத்து பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 சில விமானப் போக்குவரத்து பாதைகளிலும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாக செல்லும் பாதைகள் உள்ளிட்ட முக்கிய கடல்சார் போக்குவரத்து வழிகள் முடங்கியுள்ளதால், சர்வதேச வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. உலக சந்தையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் குறையும் போது ஏற்படும் விலை அதிகரிப்பை இலங்கையினால் கட்டுப்படுத்த முடியாது. ஏற்கனவே சர்வதேச சந்தையில் விலையேற்றங்கள் பதிவாகி வருகின்றன. அதன் தாக்கம் தவிர்க்க முடியாமல் இலங்கையையும் பாதிக்கும். எவ்வாறாயினும், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, நாட்டில் ஏப்ரல் மாதம் இறுதி வரை தேவையான எரிபொருள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த ஆண்டு முழுமைக்கும் தேவையான எரிவாயுவை விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. மேலும் மின் உற்பத்திக்காக இந்த ஆண்டு முழுவதும் தடையின்றி நிலக்கரியைப் பெற்றுக்கொள்ள விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து அல்லது விநியோக சங்கிலியில் பாதிப்புகள் அதிகரித்தால், அதற்கு மாற்றீடாக பிற வழிமுறைகளைத் தேடவும், இறக்குமதி - ஏற்றுமதி நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுக்கவும் அரசாங்கம் தயாராக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்