
பெங்களூரு: தினகரனுடன் சசிகலா பேசாததால், ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டதாக பெங்களூர் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் 20 நாட்களாக அவர் யாருடனும் பேசாமல் இருப்பதாக நிருபர்களிடம் தினகரன் தெரிவித்தார்.ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதன் முறையாக டி.டி.வி தினகரன் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தார். காலை 11.45 மணிக்கு உள்ளே சென்ற அவர் சசிகலாவை சந்தித்தார். சுமார் 3 மணி நேரத்திற்குப்பிற்கு பகல் 2.53 மணியளவில் சிறையில் இருந்து டிடிவி தினகரன் வெளியே வந்தார். அவருடன் வக்கீல்கள் அசோகன் உள்பட சிலர் இருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது; ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பொதுச்செயலாளர் சசிகலாவை முதன் முறையாக சிறையில் வந்து சந்தித்தேன். எனக்கு அவர் ஆசி வழங்கியதுடன், வாழ்த்துகளையும் தெரிவித்தார். மவுன விரதம் இருப்பதால் சைகை மூலம் பேசினார். ஜெயலலிதா இறந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. அவரின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக மவுன விரதம் இருப்பதாக சைகையில் சசிகலா தெரிவித்தார். ஜனவரி இறுதி வரை இந்த மவுன விரதம் இருக்கப்போவதாக அவர் கூறியிருக்கிறார். அதை உணர்ந்த நான் ஆர்.கே.நகர் தேர்தல் மற்றும் எனது பதவி ஏற்பு ஆகியவற்றை எடுத்து கூறினேன். அதை அமைதியாக கேட்டுக் கொண்டார். இதையடுத்து நான் எடுக்கவேண்டிய நடவடிக்கை, எனது செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து அவருடன் ஆலோசித்தேன். அதற்கு அவர் காகிதத்தில் எழுதி காட்டினார்.
அரசியலுக்கு நான் வரவேண்டும் என்று விரும்பியவர் ஜெயலலிதா. அதன் பின்னர் நான் ஆர்.கே நகரில் போட்டியிட வேண்டுமென்று விரும்பியவர் பொதுச்செயலாளர் சசிகலா. அவர் எப்பொழுது கூறினாலும் எனது பதவியை துறக்க தயார். எங்கள் குடும்பத்தில் யார் அரசியலுக்கு வரவேண்டுமென்றாலும் முடிவு எடுக்கும் பொறுப்பு சசிகலாவிற்கு மட்டுமே உள்ளது. அவர் யாரை நிறுத்துகிறாரோ, அவர்களுக்கு நான் மறைமுகமாக இருந்து உதவி செய்யவும் தயார். மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, அவர் கேட்டுக் கொண்டதன் பேரில்தான் வீடியோ எடுக்கப்பட்டது. அந்த வீடியோவை சசிகலாவிடம் இருந்து நான் தான் வாங்கி கொடுத்தேன். ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பிய நோட்டீசின் நகல் சசிகலாவிற்கு கிடைத்துள்ளது. வக்கீல்கள் மூலம் ஆதாரங்களை சமர்ப்பிக்க இருக்கிறார். நேரில் ஆஜராக வாய்ப்பு இல்லை. வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் எடப்பாடிக்கு எதிராக ஸ்லீப்பர் செல்கள் வாக்களிப்பார்கள். அப்போது யார் ஸ்லீப்பர் செல்கள் என்பது தெரியவரும்.
அதுவரை அவர்கள் யார் என்பதை கூறமுடியாது. இதேபோன்று பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் என்னுடன் இருப்பார்கள் என்றார்.ஆனால் பெங்களூர் சிறைத்துறை அதிகாரிகள், ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பிய சம்மனை நாங்கள் சசிகலாவிடம் கொடுத்தோம். அவர் இ-மெயில்
நகலை ஏற்க முடியாது. உண்மையான கடிதம் வரவேண்டும் என்றதாக தெரிவித்தனர். ஆனால் தினகரனோ அவர் பேசாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் தினகரனிடம் பேசாமல் தவிரப்பதற்காகவே அவர் மவுன விரதம் இருந்ததாக கூறியதாக பெங்களூர் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் சசிகலாவிடம் தினகரன்தான் பேசிக் கொண்டிருந்துள்ளார். அதை சசிகலா கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாராம். இதனால்தான் வெளியில் வந்து சசிகலா மவுன விரதம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த மாதம் வரை மவுன விதரம் இருப்பது தெரிந்த பிறகு ஏன் செல்ல வேண்டும். 2 நாள் கழித்து, மவுன விரதம் முடிந்த பிறகு சென்றிருக்கலாமே என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
அமைச்சர்கள் அனைவரும் டெங்கு கொசு
தினகரன் தொடர்ந்து கூறும்போது, ‘‘என்னை மூட்டைப்பூச்சிக்கு ஒப்பிட்டு அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார். மூட்டைப்பூச்சி ரத்தத்தைத்தான் குடிக்கும். ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் டெங்கு கொசு போன்றவர். அவர் மட்டுமல்ல, தமிழக அமைச்சர்கள் அனைவரும் டெங்கு கொசு போன்றவர்கள். அந்த கொசுக்களுக்கெல்லாம் நான் பதில் கூற முடியாது. அந்த கொசுக்களை மக்கள் அடித்து விரட்டுவார்கள்’’ என்றார்.