- Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்
வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தமிழரசுக் கட்சியில் இணைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மாகாண சபையில் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த முயற்சிகளுக்கு கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோவின் தீா்மானத்திற்கு மாறாக அமைச்சா் டெனீஸ்வரன் ஆதரவளித்துள்ள நிலையிலேயே இச்செய்தி வெளியாகியுள்ளது.
2013 ஆம் ஆண்டு வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ரெலோ அமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட டெனீஸ்வரன் வெற்றி பெற்றிருந்தார்.
கட்சி ரீதியாக அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்ட போது ரெலோ சார்ப்பில் அவருக்கு மீன்பிடி அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்ததுடன், அவர் இதுவரை அந்த கட்சியுடனேயே இணைந்து செயற்பட்டும் வந்திருந்தார்.
இந்த நிலையில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் சாட்சியங்கள் சமூகமளிக்காமையால் அவரது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும் வடமாகாண முதலமைச்சர் விசாரணை குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மீள மேற்கொள்ளப் போவதாகவும் அமைச்சரை ஒரு மாத விடுமுறையில் இருக்குமாறும் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இந்த பின்புலத்தில் அமைச்சா் டெனீஸ்வரன் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக கையொப்பமிட்டிருந்தார்.
இது இவ்வாறு இருக்கையில் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டுக்கு எதிராக ரெலோ அமைப்பு தீர்மானம் நிறைவேற்றி தமது உறுப்பினர்களை அந்த கூட்டத்திற்கு அழைத்திருந்தது. ஆனால் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் அதில் கலந்துக் கொள்ளாது தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது
இது குறித்து ரெலோ அமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தாவிடம் கேட்ட போது, டெனீஸ்வரன் எமது கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை எனவும் அவர் முதலமைச்சருக்கு எதிராக கையொப்பம் இட்டமை தொடர்பில் விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்

About UK TAMIL NEWS