நெற்செய்கைக்கு மேலதிகமாக 12 பயிர்களுக்கு விவசாய மானியம் – அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!

 



இலங்கை விவசாய வரலாற்றில் முதன்முறையாக நெற்செய்கைக்கு மேலதிகமாக மேலும் 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவிலான நிதியை விவசாயிகளுக்கான பயிர்ச்செய்கை மானியமாக வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கான செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், விவசாயிகளுக்கு வழங்கப்படுவது குறிப்பிட்ட தேவைகளுக்காக மட்டும் ஒதுக்கப்பட்ட நிதியல்ல; அது பொதுவான பயிர்ச்செய்கை மானியம் எனத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, விவசாயிகள் தமக்குக் கிடைக்கும் மானியத் தொகையை உரம் கொள்வனவு செய்வதற்கும், பயிர்ச் சேதங்களை ஈடுசெய்வதற்கும், நிலத்தைப் பண்படுத்துவதற்கும் அல்லது தமது விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான ஏனைய செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் விளக்கமளித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது வழங்கப்பட்டு வந்த மானியத் தொகையை தற்போது இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை நெற்செய்கைக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்த மானியத் திட்டத்தில் புதிதாக 12 உணவுப் பயிர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நெல் உள்ளிட்ட மொத்தம் 13 பயிர்களுக்கு விவசாய மானியம் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, நெல் பயிரிடப்படும் வயல் நிலங்களில் மேலதிகமாக ஏனைய பயிர்களையும் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, நெற்செய்கைக்காக வழங்கப்படும் அதே அளவிலான மானியத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நடைமுறையில் இல்லாத வகையில் விவசாயிகளுக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு, இந்த மானியத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.