இலங்கைக்கு வந்திறங்கிய 34 அமெரிக்க தன்னார்வத் தொண்டர்கள் – இரண்டு ஆண்டுகள் சேவை!

 

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழிக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அமைதிப் படையின் (Peace Corps) 34 தன்னார்வத் தொண்டர்கள் இலங்கையில் தமது இரண்டு வருடகால சேவையை ஆரம்பித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு நடைபெற்ற சேவை உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், நேற்று (17) வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய தன்னார்வக் குழு!

2018ஆம் ஆண்டு அமெரிக்க அமைதிப் படையின் இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு வருகை தந்துள்ள மிகப்பெரிய தன்னார்வத் தொண்டர் குழுவாக இந்த 34 பேர் கொண்ட குழு அமைந்துள்ளது.

இவர்கள் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் இலங்கை ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

குறிப்பாக, வகுப்பறைக் கற்பித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் ஊடாக மாணவர்களின் ஆங்கில மொழித் திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கவுள்ளனர்.

வகுப்பறைகளில் ஆரம்பமாகும் இலங்கை – அமெரிக்க நட்புறவு!

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, கல்விசார் ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையிலான தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.

இதன்போது அவர்,

“இராஜதந்திர உறவுகள் எப்போதும் பேச்சுவார்த்தை மேசையிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதில்லை. சில நேரங்களில் அவை வகுப்பறை மேசையிலிருந்தும் ஆரம்பிக்கலாம்” எனக் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கைக்கான அமெரிக்க அமைதிப் படைத் திட்டத்தின் பணிப்பாளர் ஜெஃப்ரி கோவியா உள்ளிட்ட குழுவினர் இந்தக் கல்விசார் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

இந்தத் திட்டத்தின் ஊடாக இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான கல்விசார் ஒத்துழைப்பு, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் மக்களிடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.