“அரசியலை விட்டுவிட்டு சினிமாவை பாருங்கள்” – சிவகார்த்திகேயன் கூறியதாக சீமான் தகவல்

 



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்திய நிகழ்வொன்றில் பேசிய சீமான், தான் மீண்டும் சினிமாவில் நடிப்பது தொடர்பாக பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அப்போது, “சினிமாவில் நடித்தால்தானே வாக்களிப்பீர்கள். அதனால்தான் நானும் மீண்டும் சினிமாவில் நடிக்கச் சென்றுவிட்டேன்” என சீமான் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், சிவகார்த்திகேயன் தன்னிடம், “அண்ணே, அரசியலை விட்டுவிடுங்கள். இனிமேல் சினிமாவைப் பாருங்கள். மக்கள் உங்களைத் தேடி வரட்டும்” எனக் கூறியதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமானின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, சிவகார்த்திகேயன் அவரிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரையிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.