உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மன்னார் மாவட்டம் தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளைப் பார்வையிடுவதற்கான விசேட படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான சோதனை ஓட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த கடற் திட்டுகளைப் பார்வையிடுவதற்கான படகு சேவை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (1) நடைபெற்றது. இதில் துறைசார் திணைக்களத் தலைவர்கள், தலைமன்னார் பங்குத்தந்தை, கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
படகு சேவையின் கீழ் ஒரு படகில் அதிகபட்சமாக 7 சுற்றுலாப் பயணிகள் வரை பயணிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஒருவருக்கு ரூ.140 கட்டணம் அறவிடப்படவுள்ளதுடன், படகு உரிமையாளர்களால் ஒருவருக்கு ரூ.2,500 என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 7 பயணிகள் கொண்ட ஒரு படகிற்கான படகுக் கட்டணம் ரூ.17,500 ஆகும்.
தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.17,500 கட்டணத்தின் மூலம் இலங்கைக்குச் சொந்தமான 5 மணல் தீவுகள் வரை சென்று பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது மணல் தீவில் பயணிகள் இறங்கி நீச்சல் உள்ளிட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான மேலதிக கட்டணங்களை மேலாண்மைக் குழு விரைவில் அறிவிக்கவுள்ளது.
மேலும், மூன்றாவது மணல் தீவில் இறங்கி குறிப்பிட்ட நேரம் தங்கியிருந்து பார்வையிடுவதற்கும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த படகு சேவையைப் பயன்படுத்த விரும்பும் சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா மேலாண்மைக் குழுவைத் தொடர்புகொண்டு தங்களுக்கான பயண ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
