ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக வெளியான செய்திகளை அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், கடந்த ஜூன் 29ஆம் திகதி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உடனடியாக விசாரணைகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நிறுவனத்தின் உள்துறை தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் அல்லது செயல்பாட்டு அமைப்புகளுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியமை, தகவல்களுக்குச் சேதம் ஏற்பட்டமை, தரவுகள் திருடப்பட்டமை அல்லது நிறுவனத்தின் சேவைகள் மற்றும் செயல்பாட்டுத் தொடர்ச்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டமை தொடர்பில் எந்தவொரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மின்னஞ்சல் சேவைகள் உள்ளிட்ட அனைத்து தகவல் தொழில்நுட்ப அமைப்புகளும் சேவைகளும் தடையின்றிச் செயல்பட்டதாகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விமானச் சேவைகளின் செயல்பாடுகளுக்கோ சேவைகளின் தொடர்ச்சிக்கோ பாதிப்பு ஏற்படவில்லை என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், எந்தவொரு தரப்பினராலும் பிட்கொயின் (Bitcoin), அமெரிக்க டொலர்கள் அல்லது வேறு எந்த வடிவத்திலும் கப்பம் கோரப்படவில்லை எனவும், பணம் செலுத்துவது தொடர்பாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமது தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவப்பட்டதாகவும், அவை சைபர் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முற்றாக நிராகரித்துள்ளது.
