மின்னல், பலத்த காற்று குறித்து அவதானம் – வானிலை தொடர்பில் புதிய அறிவிப்பு

 



நாட்டின் பல பகுதிகளில் இன்று இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குறித்த பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.