இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில், மனைவியின் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு ஆதரவளித்த கணவனே, பின்னர் சந்தேகம் மற்றும் கட்டுப்படுத்தும் மனப்பான்மை காரணமாக அவரைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், ராஜம் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டம்பேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம ராஜு. இவரது மனைவி லலிதா குமாரி. கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்குப் பின்னரும் கல்வியைத் தொடர வேண்டும் என்ற மனைவியின் விருப்பத்திற்கு ஆதரவளித்த சீதாராம ராஜு, அவரைப் பொறியியல் பட்டப்படிப்பு (B.Tech) படிக்க வைத்துள்ளார். இதன் மூலம் கல்வியை நிறைவு செய்த லலிதா குமாரி, 2017ஆம் ஆண்டு மின்சாரத் துறையில் பொறியாளராகப் பணியில் இணைந்துள்ளார்.
எனினும், மனைவியின் தொழில் வளர்ச்சிக்குப் பின்னர் குடும்பத்தில் கருத்து முரண்பாடுகள் உருவாகியதாகக் கூறப்படுகிறது. பணியிடத்தில் சக ஆண் ஊழியர்களுடன் லலிதா குமாரி இயல்பாகப் பேசிப் பழகுவதை கணவர் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், ஆண் ஊழியர்களுடன் பேசக்கூடாது என மனைவிக்கு அவர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். ஆனால், பணிசார்ந்த உரையாடல்களைத் தவிர்க்க முடியாத நிலையில் இருந்த லலிதா குமாரிக்கும் கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளன.
கணவரின் சந்தேகமும் கட்டுப்பாடுகளும் அதிகரித்ததால் மனமுடைந்த லலிதா குமாரி, அவ்வப்போது இரண்டு குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு தனது தாயார் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து பணிக்குச் சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் அங்கு செல்லும் சீதாராம ராஜு, மனைவியுடன் சமாதானம் பேசி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
இருப்பினும், இருவருக்கும் இடையிலான பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்துள்ளன. இந்நிலையில், மனைவி தனது கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்படியவில்லை என்ற ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ய சீதாராம ராஜு திட்டமிட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்காக வெட்டுக் கோடாலி ஒன்றை வாங்கிய அவர், ஊருக்கு வெளியே அமைந்துள்ள சுடுகாட்டுப் பகுதியில் அதனை மறைத்து வைத்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி இரவு மீண்டும் தம்பதியருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மறுநாள் காலை தனது தாயார் வீட்டுக்குச் செல்லப்போவதாக லலிதா குமாரி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மறுநாள் காலை மனைவியைப் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றுள்ளார் சீதாராம ராஜு. ஆனால், அவர் மனைவியை ஏற்கெனவே கோடாலியை மறைத்து வைத்திருந்த சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சென்றதும் மறைத்து வைத்திருந்த கோடாலியை எடுத்து லலிதா குமாரியின் தலையில் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொலையை விபத்தாகச் சித்தரிக்கத் திட்டமிட்ட சீதாராம ராஜு, மனைவியின் சடலத்தை வீதியோரத்தில் வைத்துவிட்டு, அருகில் ஸ்கூட்டர் மற்றும் தொலைபேசியையும் வைத்துள்ளார்.
பின்னர், அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தங்களது ஸ்கூட்டர் மீது மோதியதில் மனைவி உயிரிழந்துவிட்டதாகக் கூறி பொலிஸாரிடம் நாடகமாடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் அங்கு சென்று லலிதா குமாரியின் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன்போது, அவரது தலையில் காணப்பட்ட காயங்கள் பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதனைத் தொடர்ந்து கணவர் சீதாராம ராஜுவை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணைக்கு உட்படுத்தியபோது, மனைவியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
தாயை இழந்த நிலையில் தந்தையும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், இந்தத் தம்பதியின் இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மனைவியின் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு ஆரம்பத்தில் ஆதரவளித்த கணவனே, பின்னர் சந்தேகம் மற்றும் ஆதிக்க மனப்பான்மையால் அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
