இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டிற்கு அருகில் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளதுடன், படிப்படியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நாள் முழுவதும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (22) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற எதிர்வரும் வானிலை நிலைமைகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை
இலங்கையைச் சூழ இடையக வெப்பமண்டல ஒன்றிணைவு வலயம் (ITCZ) காணப்படுவதால் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகியுள்ளதுடன், நாளையும் (23) நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மழையுடனான வானிலை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தமான் தீவுகளுக்கு அருகில் உருவாகக்கூடிய குறைந்த அழுத்தப் பிரதேசம்
இடையக வெப்பமண்டல ஒன்றிணைவு வலயத்தின் தாக்கம் காரணமாக, ஒக்டோபர் 23ஆம் திகதியளவில் அந்தமான் தீவுகளைச் சூழ குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாக மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டாலும், காற்றோட்டத்தின் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை ஒக்டோபர் 27ஆம் திகதி வரை தொடரக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆழ்கடல் மீனவர்களுக்கு விசேட எச்சரிக்கை
இதற்கிடையில், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் காணப்படும் குறைந்த அழுத்த நிலைமை மேலும் தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள், குறிப்பாகப் பலநாள் மீன்பிடிப் படகுகளை இயக்குபவர்கள், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானித்து அதற்கேற்ப செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.