சீரற்ற காலநிலை: பாடசாலைகள், முன்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை



 சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (27) விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் இன்று மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.

முன்பள்ளிச் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து முன்பள்ளிகளினதும் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை தொடரும்

எவ்வாறாயினும், 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளவாறு உரிய பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, குறித்த செய்முறைப் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் திட்டமிட்டபடி பரீட்சைகளுக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பரீட்சை தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் அல்லது சந்தேகங்கள் ஏற்படின், சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளரைத் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.