சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பங்களாதேஷைச் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிக்கு இடையில் திருமண உறவு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களை, இருவரது குடும்பத்தினரும் மறுத்துள்ளனர்.
பங்களாதேஷைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் (22) மற்றும் ஸ்வீட்டி அக்தர் (25) ஆகிய இருவருக்கும் கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் சவுதி அரேபியாவில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.
மக்கா நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
திருமண உறவு இல்லை எனக் குடும்பத்தினர் தெரிவிப்பு
சமூக வலைத்தளங்களில் நஸ்ருல் இஸ்லாம் மற்றும் ஸ்வீட்டி அக்தர் ஆகியோர் கணவன், மனைவியாக இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இருவரது குடும்பத்தினரும் இதனை மறுத்துள்ளனர்.
நஸ்ருல் இஸ்லாமின் தந்தை அப்துல் பஷீர் தெரிவிக்கையில், குடும்பத்தின் வறுமை காரணமாகக் கடன் பெற்று தனது மகனை சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்துத் தங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஸ்வீட்டி அக்தரின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஏற்பட்டுள்ளதாகவும், நான்கு வயதுடைய பெண் குழந்தை இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
நஸ்ருல் இஸ்லாமைத் தங்களுக்குத் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள், ஸ்வீட்டி விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
சவுதி அரசிடம் விளக்கம் கோரும் பங்களாதேஷ்
இந்த மரண தண்டனை தொடர்பில் தமது தூதரகத்துக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்படாதமைக்கு பங்களாதேஷ் அரசு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக டாக்காவில் உள்ள சவுதி அரேபியத் தூதரை நேரில் அழைத்து, பங்களாதேஷ் அதிகாரிகள் விளக்கம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விதம் மற்றும் தூதரகத்துக்குத் தகவல் வழங்கப்பட்டமை தொடர்பான சர்ச்சைகள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பங்களாதேஷ் மக்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன
.jpg)