கடல் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை! மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்

 


வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் இலங்கையைச் சூழவுள்ள ஆழமான, ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (27) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'அர்னாப்' புயல் மேலும் வலுவடைந்தது

மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த 'அர்னாப்' தீவிர புயல் மேலும் வலுவடைந்து மிகத் தீவிர புயலாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில், வட அகலாங்கு 15.9 மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4 ஆகிய புவியியல் அமைவிடங்களுக்கு அருகில் இந்தப் புயல் மையம் கொண்டிருந்தது. இது காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 890 கிலோமீற்றர் தொலைவில் காணப்பட்டது.

இந்தப் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி வரை மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (28) முற்பகல் 11.30 மணியளவில் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையூடாக இந்தியக் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மணிக்கு 140 கி.மீ. வரை காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 80 முதல் 140 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், கடல் அலைகளின் உயரம் 3 முதல் 4 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு அவசர அறிவுறுத்தல்

இந்த அபாய நிலைமையைக் கருத்திற்கொண்டு, மறுஅறிவித்தல் வழங்கப்படும் வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே குறித்த கடல் பகுதிகளில் மீன்பிடி அல்லது கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, மீனவர்கள், கடற்படையினர் மற்றும் கடல் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிடுவோர் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானித்து, பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுவது அவசியமாகும்.