நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு.


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் பணச்சலவை தொடர்பான விசாரணைகளில், சட்டமா அதிபரின் ஆலோசனைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.


பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் 15 மில்லியன் ரூபாவைத் தனியார் நிறுவனமொன்றில் முதலீடு செய்ததன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணைகள் 2016ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டு, சாட்சியங்கள் அடங்கிய கோவைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.


இந்த வழக்கு இன்று (29) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்களான சுஜானி போகொல்லாகம, நித்ய சமரநாயக்க மற்றும் சுதர்ஷன பண்டார ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.


விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டு கோவைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்ட போதிலும், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை எவ்வித ஆலோசனைகளும் கிடைக்கவில்லை என நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார். அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.