நாகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்! 32 வயது சந்தேகநபர் கைது

 



களுத்துறை, நாகொட பகுதியில் உணவக உரிமையாளரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவலை, ரணால பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்தபோது 32 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் பதுளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி காலை நாகொட பகுதியில் உள்ள உணவகத்திற்கு முன்னால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 54 வயதுடைய உணவக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், காயமடைந்த அவரது மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் பாதுகாப்புக் கமராக்களில் பதிவான CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம், பிரதான துப்பாக்கிதாரி கடுவலை பகுதியில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 'திப்பிட்டிகொட சக்தி' என்பவரின் உறவினர் வீட்டில் மறைந்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

'களுத்துறை நவீன்' என்பவரின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் T-56 ரக துப்பாக்கி மற்றொரு நபரால் சந்தேகநபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டின் பின்னர் அது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட பரிமாற்றத்திற்கு அருகில் வைத்து வேறொரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் மற்றும் துப்பாக்கி தொடர்பான மேலதிக தகவல்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.