அஹுங்கல்ல, கல்வெஹெர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (4) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில், அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் அதே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கல்வெஹெர பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.