பிரான்சில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தேவைப்பட்டால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.
சனிக்கிழமையன்று பிரான்சின் பல்வேறு பகுதிகளில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோர் போராட்டங்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அரச கட்டடங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், தீவைப்பு மற்றும் சூறையாடல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
போராட்டங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
நாட்டில் நிலவும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும், நகரங்கள், பொதுக் கட்டடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களைப் பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் மேயர்களுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மக்ரோன் தெரிவித்துள்ளார்.
மேலும், நிலைமையைப் பொறுத்து குறிப்பிட்ட சில பொதுக் கூட்டங்களுக்குத் தடை விதிப்பதுடன், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலவரத்தில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை
இதற்கிடையில், பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பிலும் மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த மக்ரோன், இது குறித்து ஆராயுமாறு உள்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
வன்முறைகளில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவோர் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், சூறையாடலில் ஈடுபட்டவர்கள் ஏற்பட்ட இழப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பிரான்சில் போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
