நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், நுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்றுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முறையான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மீண்டும் டெங்கு நோயின் தீவிரப் பரவல் ஏற்படக்கூடும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர எச்சரித்துள்ளார்.
மழைக்காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கடந்த காலங்களிலும் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தற்போதைய நிலையைத் தொடர்ந்து பேணுவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட டெங்குவின் தீவிரப் பரவல் மற்றும் பெருந்தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு உடனடியாக அகற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள், பழைய டயர்கள், கொள்கலன்கள் மற்றும் ஏனைய பொருட்களை முறையாக அகற்றுவதுடன், வீடுகள் மற்றும் வளாகங்களில் நீர் தேங்குவதைத் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
டெங்கு பரவலைத் தடுப்பதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுடன் பொதுமக்களும் இணைந்து செயற்படுவது அவசியமாகும்.