வெடிகுண்டு மிரட்டல்: டெல் அவிவ் ..........!



இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து ஒஸ்திரியத் தலைநகர் வியன்னா நோக்கிப் பயணித்த ஒஸ்திரியன் எயார்லைன்ஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

பல்கேரிய போக்குவரத்து அமைச்சை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

51 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 57 பேருடன் பயணித்த ஏர்பஸ் A320 ரக விமானம், டெல் அவிவிலிருந்து மாலை 6.40 மணியளவில் வியன்னா நோக்கிப் புறப்பட்டுள்ளது.

ரோமானிய எல்லைக்கு அருகிலுள்ள வான்பரப்பில் விமானம் பயணித்துக்கொண்டிருந்தபோது, வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான எச்சரிக்கை விமானக் குழுவினருக்குக் கிடைத்துள்ளது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தைச் சோஃபியாவுக்குத் திருப்பி அவசரமாகத் தரையிறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பல்கேரிய விமானப்படையின் போர் விமானம் ஒன்று குறித்த பயணிகள் விமானத்தைப் பாதுகாப்பாகச் சோஃபியா விமான நிலையம் வரை வழிநடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து, இரவு 9.25 மணியளவில் விமானம் சோஃபியா விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.