பங்களாதேஷை வீழ்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலம்

 


ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை 63 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 21 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்தில் தடுமாறியது.

எனினும், தரிந்து ரத்நாயக்க அதிரடியாக துடுப்பெடுத்து 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 65 ஓட்டங்களைப் பெற்றார். அணித்தலைவர் சஹான் ஆரச்சிகே 33 ஓட்டங்களைச் சேர்க்க, இலங்கை 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணியின் சார்பில் மெஹதி ஹசன், சைஃப் ஹசன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களும் ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்ததால், 4 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

அணியில் அதிகபட்சமாக நசும் அஹமட் 26 ஓட்டங்களைப் பெற்றார். எனினும், இலங்கை பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால் பங்களாதேஷ் அணி 17.3 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவன் துஷார, தரிந்து ரத்நாயக்க, விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் வனுஜ சஹான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்மூலம் இலங்கை அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட்டில் வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியது.