முல்லைத்தீவு மாவட்டத்தின் கெப்பாப்புலவில், பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டில் இருந்து வந்த சுமார் 6.97 ஏக்கர் காணி பொதுப் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளதுடன், விடுவிக்கப்பட்ட காணி இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம் முறைப்படி கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான ஏ. உமாமகேஸ்வரன் முன்னிலையில் இந்தக் காணி ஒப்படைப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாவசியமான தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்காகத் தொடர்ந்து தேவைப்படும் பகுதிகளைத் தவிர்த்து, பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலுள்ள காணிகளைப் படிப்படியாக அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பதுடன், பொதுப் பயன்பாட்டிற்காகவும் விடுவிப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும். அதன் ஒரு பகுதியாகவே கெப்பாப்புலவில் இந்தக் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாதுகாப்பு அமைச்சு, இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவின் தளபதி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் ஏ. உமாமகேஸ்வரன் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார்.
.jpg)