வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (10) பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் எதிர்கொண்டுவரும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் காரணமாக மக்களின் வாழ்க்கைத்தரம், குடும்ப வருமானம் மற்றும் பொருளாதார நிலைமையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பிரதேசங்களில் நிலவும் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைபாடுகள், சுகாதாரம், கல்வி, பாடசாலை மாணவர்களின் போசாக்கு மற்றும் தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிரமங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான நடைமுறை ரீதியான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரதேச மட்டத்தில் தகவல்களைத் திரட்டி, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், எம்.ஏ.எம். தாஹிர், இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், எம். எஸ். உதுமா லெப்பை, செல்வம் அடைக்கலநாதன், இரா. சாணக்கியன், பத்மநாதன் சத்தியலிங்கம், கே. காதர் மஸ்தான், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.