நந்தா மாலினி மறைவு: அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்.



மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தை முன்னிட்டு, அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, இன்று (21), நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய மூன்று தினங்களிலும் அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தல் 04/2026 ஆம் இலக்க உள்நாட்டலுவல்கள் சுற்றறிக்கை மூலம் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளின் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2026 ஆகஸ்ட் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்தச் சுற்றறிக்கையில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார கையொப்பமிட்டுள்ளார்.

நந்தா மாலினியின் மறைவைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தினங்களை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இலங்கையின் புகழ்பெற்ற மூத்த பாடகியான நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில், நேற்று (20) நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.