மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துங்கள் – இலங்கை அரசுக்கு இந்தியாவின் வலியுறுத்தல்.

 


இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்காக வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருந்த விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்புகளின் போது, மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதுடன், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசியலமைப்பின் ஏற்பாடுகளை முழுமையாக அமல்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டப் பணிகளை துரிதப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, 2017ஆம் ஆண்டு இந்திய வம்சாவளித் தமிழ் (IOT) சமூகத்திற்காக அறிவிக்கப்பட்ட 10,000 வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுமாறு இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

நீண்டகாலமாக நீடித்து வரும் இந்தியா–இலங்கை மீனவர் பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தப்பட்ட நிலையில், இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்க இலங்கையின் ஒத்துழைப்பை அவர் கோரினார். அதேவேளை, வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்ட மனிதாபிமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இதேவேளை, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை நிலப்பரப்பு பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2024 டிசம்பரில் வழங்கிய உறுதிமொழியை விக்ரம் மிஸ்ரி வரவேற்றார்.

இரு நாடுகளின் மக்களின் பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்தை நோக்கமாகக் கொண்ட பரஸ்பர நன்மை பயக்கும் அபிவிருத்திப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த விஜயம் உறுதியான அடித்தளமாக அமைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 2024 டிசம்பர் இந்திய விஜயத்தின் போது உருவாக்கப்பட்ட தொலைநோக்கு ஒத்துழைப்பு திட்டங்களையும், பிரதமர் நரேந்திர மோடியின் 2025 ஏப்ரல் இலங்கை விஜயத்தின் போது எட்டப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களையும் நடைமுறைப்படுத்த இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.