மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர விசாரணை ஆரம்பம்.



 தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் Suresh Sale சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கிடைத்த முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து இன்று (16) குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளிடமிருந்து மேலும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழ்நிலை தொடர்பாக அவருடைய உறவினர்கள் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம் குறித்த விசேட ஆய்வில், முறையான காற்றோட்டம் இல்லாதது உள்ளிட்ட அடிப்படை குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட சிறைக்கூடத்திற்கு அருகில் இருந்த கைதிகளிடமும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு வழங்கப்படும் மருத்துவ பராமரிப்பு குறித்தும் ஆணைக்குழு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.