வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் ஏற்பட்ட தகராறு கொலைச் சம்பவமாக மாறியதில் 32 வயதுடைய ஒருவரான சேதுபதி நிரோஜன் உயிரிழந்துள்ளார். மேலும், அவரது தாய் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின் படி, ஆலயத்தின் கதவை உடைத்து ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை நடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அங்கு இருந்த நிரோஜனின் தாய் எதிர்த்து கேள்வி எழுப்பிய நிலையில், அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாய்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் நிரோஜன் குறித்த குழுவினரிடம் விளக்கம் கேட்கச் சென்றபோது, இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது மோதலாக மாறிய நிலையில், குழுவில் இருந்த பெண் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிரோஜனை குத்தியதாக தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த நிரோஜன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.