சாரதி உரிமம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது – பயணிகள் பாதுகாப்பில் பொலிஸ் நடவடிக்கை.



 சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) இல்லாமல் அதிக பயணிகளுடன் பேருந்தை பிரதான வீதியில் இயக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், சந்தேகநபர் ஹட்டன்–டிக்கோயா சலங்கந்த பகுதியில் இருந்து தினமும் சாரதி உரிமம் இன்றி பேருந்தை இயக்கி வந்ததும், பயணத்தின் இடையே மற்றொரு சாரதிக்கு வாகனத்தை ஒப்படைப்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த பேருந்து செங்குத்தான மற்றும் ஆபத்தான வளைவுகள் கொண்ட ஹட்டன்–சலங்கந்த பாதையில் இயக்கப்பட்டு வந்ததால், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் உரிமையாளருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.