தொங்கு சட்டசபை சிக்கல்: 108 இடங்களுடன் முன்னிலை தவெக – ஆட்சி யாருடன்?

 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளன. இதுவரை இல்லாத வகையில் மும்முனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சுமார் 30% வாக்குகளைப் பெற்று 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து, திமுக–அதிமுக என்ற பாரம்பரிய இருதுருவ அரசியல் அமைப்பை முறியடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 1967க்கு பின்னர், இந்த இரண்டு முக்கிய கட்சிகளில் எதுவுமின்றி ஒரு புதிய கட்சி இவ்வளவு பெரிய அளவில் எழுச்சி காண்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.




ஆனால், இந்த வரலாற்றுச் சாதனையுடன் கூட ஒரு சிக்கலும் உருவாகியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெக தற்போது அதற்கு 10 இடங்கள் குறைவாகவே உள்ளது. இதனால் தொங்கு சட்டசபை (Hung Assembly) உருவாகும் சூழல் உருவாகியுள்ளதுடன், ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவு அவசியமாகியுள்ளது.

இந்த நிலையில், தவெக எந்தக் கட்சியுடன் கைகோர்க்கப் போகிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது. திமுக அல்லது அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கோரப்படுமா, அல்லது நேரடியாக அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. முன்பு நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருந்தாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலை புதிய சமரசங்களுக்கு வழிவகுக்குமா என்பது கவனிக்கப்படுகின்றது.

மற்றொரு புறம், காங்கிரஸ் கட்சி சில தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் இருப்பதால், அவர்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா என்பதும் முக்கியமான கேள்வியாக உள்ளது. எந்த வழியிலாயினும், ஆட்சி அமைக்க தவெகவிற்கு கூட்டணி ஆதரவு அவசியமாக இருப்பது தெளிவாகியுள்ளது. இதனால், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலின் திசையை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகின்றன.