கனடாவில் நடைபெற்ற 76ஆவது FIFA மாநாட்டில், பாலஸ்தீன கால்பந்து சங்கத்தின் தலைவர் ஜிப்ரில் ரஜூப் மற்றும் இஸ்ரேல் கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் பாசிம் ஷேக் சுலைமான் இடையே ஏற்பட்ட கைகுலுக்க மறுப்பு சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மாநாட்டின் போது FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ இருவரையும் மேடைக்கு அழைத்து பரஸ்பர ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் நோக்கில் அருகில் வருமாறு கேட்டுக்கொண்டார். எனினும், ரஜூப் அவருடன் கைகுலுக்கவோ அல்லது அருகில் நிற்கவோ மறுத்தது நிகழ்வில் பதற்றமான சூழலை உருவாக்கியது.
இந்த சம்பவம் குறித்து பாலஸ்தீன கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் சூசன் ஷலாபி விளக்கமளிக்கையில், இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து ரஜூப் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார். மேற்குக்கரை பகுதியில் உள்ள இஸ்ரேலிய கிளப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர் ஆற்றிய உரையின் நோக்கம் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாகவும் பாலஸ்தீன தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
மேற்குக்கரை குடியேற்றப் பகுதிகளில் இயங்கும் கிளப்புகள் குறித்து நீண்டகாலமாக நிலவி வரும் சர்ச்சைகள் இன்னும் சர்வதேச சட்டத்தின் கீழ் தீர்வு காணப்படாத நிலையில், FIFA இதுவரை நேரடி நடவடிக்கை எடுக்காமல் இருந்துவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீன கால்பந்து சங்கம் Court of Arbitration for Sport (CAS) அமைப்பில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதேவேளை, உலக அரசியல் பதற்றங்கள் விளையாட்டு அரங்கையும் பாதிக்கத் தொடங்கியுள்ளதற்கான உதாரணமாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், ஈரான் அணிக்கு 2026 உலகக்கோப்பையில் விளையாட அனுமதி வழங்கியிருப்பது FIFA-வின் நிலைப்பாட்டை மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளது.
