உணவுப் பொருள்கள் சூடாக இருக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருந்தாலும், உடலில் அதிகமாகச் சேரும் சூடு பல்வேறு உடல் பிரச்சினைகளுக்குக் காரணமாக மாறக்கூடும். உடல் சூடு அதிகரிப்பதால் தலைவலி, கண் எரிச்சல், சோர்வு, தோல் பிரச்சினைகள் போன்ற பல அசௌகர்யங்கள் உருவாகும். சில சமயங்களில் இது உடல்நல குறைபாடுகளுக்கும் நேரடி காரணமாக இருக்கலாம். மருந்துகள், தவறான வாழ்க்கை முறை, நீர்ச்சத்து குறைவு, ஹார்மோன் மாற்றங்கள் (மெனோபாஸ் போன்றவை), அதிக வெப்ப சூழல் போன்ற பல காரணிகள் உடல் சூட்டை அதிகரிக்கக் காரணமாகின்றன.
உடல் சூட்டை குறைப்பதில் மிகவும் எளியதும் முக்கியமானதும் தண்ணீர் குடிப்பதே ஆகும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவுவதோடு, உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது. அதேபோல், எப்போதும் மூடிய இடங்களில் இருக்காமல், இடைவெளி எடுத்துக்கொண்டு வெளியில் சென்று இயற்கையான குளிர்ந்த காற்றை உடலுக்கு கிடைக்கச் செய்வதும் முக்கியம். இது உடல் வெப்பத்தை இயல்பாகக் குறைக்க உதவும்.
குளிக்கும் முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்நீரில் குளிப்பதைத் தவிர்த்து, குளிர்ந்த அல்லது அறை வெப்பநிலையிலான நீரில் குளிப்பது நல்லது. மேலும், மணிக்கட்டு, கழுத்து, நெஞ்சுப் பகுதி போன்ற இடங்களில் குளிர்ந்த நீர் அல்லது ஐஸ்கட்டி ஒற்றுவதால் உடலுக்குள் விரைவாக குளிர்ச்சி பரவுகிறது.
அதிக வெப்பமான சூழலில் கடுமையான உடற்பயிற்சி அல்லது அதிக உழைப்பைத் தவிர்ப்பதும் அவசியம். அவற்றைச் செய்ய வேண்டுமானால் காற்றோட்டமான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். உடைத் தேர்வும் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. நைலான், அக்ரிலிக் போன்ற செயற்கை துணிகள் உடலில் வெப்பத்தை அடக்கி வைத்துக் கொள்ளும். அதற்கு பதிலாக பருத்தி அல்லது கைத்தறி துணிகளை அணிவது உடலிலிருந்து வெப்பத்தை வெளியேற்ற உதவும்.
எண்ணெய் தேய்த்து குளிப்பதும் உடல் சூட்டை குறைக்கும் ஒரு பாரம்பரியமான மற்றும் பயனுள்ள முறையாகும். ஆனால், சில உடல் நிலைகளில் இது பொருந்தாது என்பதால், தேவையானால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.
உடல் சூடு அதிகமாக இருப்பதுடன் கண் எரிச்சல், தலைவலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். உடல் நலத்தைப் பாதுகாக்க சிறிய பழக்கவழக்க மாற்றங்களே பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
