தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்று புதிய சாதனை உருவாகியுள்ளது. சமீபத்திய தகவல்களின் படி, மொத்தமாக 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதன் அடிப்படையில், சுமார் 4 கோடியே 80 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி வாக்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மொத்தமாக சுமார் 4 கோடியே 63 லட்சம் பேர் வாக்களித்திருந்தனர். அந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இம்முறை தபால் வாக்குகள் உட்பட 24 லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுதலாக வாக்களித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்பு அதிகபட்ச வாக்குப்பதிவு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலேயே பதிவாகியிருந்தது. அப்போது 78.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இம்முறை வாக்குப்பதிவு அதிகரிக்க காரணமாக, வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட விரிவான திருத்தப் பணிகள் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, இரண்டு இடங்களில் பெயர் இருந்த வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு தேவையற்ற பதிவுகள் நீக்கப்பட்டதுடன், உயிரிழந்தவர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் காரணமாக உண்மையான வாக்காளர்களின் எண்ணிக்கை தெளிவாக நிர்ணயிக்கப்பட்டதால், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதாக தேர்தல் வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.