நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (01) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மேல் மற்றும் தெற்கு மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அதிகாலை நேரங்களில் மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும் என்பதால், போக்குவரத்தில் ஈடுபடுவோர் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் காலங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களையும் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திறந்த வெளிகளில் தங்குவது, உயரமான மரங்களின் கீழ் இருப்பது போன்றவற்றைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் தங்குவது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
