அதிக விலைக்கு அரிசி, குடிநீர் விற்ற வர்த்தகர்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம்!

 


நாட்டின் பல பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, கடந்த 24ஆம் திகதி கண்டி, திருகோணமலை, காலி, தங்காலை, கிராந்துருகோட்டை மற்றும் ஹப்புத்தளை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த பல வர்த்தக நிலையங்களில் அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்புகளை நடத்தினர்.

சோதனைகளின் போது, கீரி சம்பா உள்ளிட்ட சில அரிசி வகைகள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் அடிப்படையில், திருகோணமலையில் ஒருவருக்கும், காலி மற்றும் தங்காலை பகுதிகளில் தலா இரு வர்த்தகர்களுக்கும், கிராந்துருகோட்டையில் ஒருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹப்புத்தளை பகுதியில் செயல்பட்ட ஒரு வர்த்தகருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில், அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதமும், அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.