முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் மனைவிஷிரந்தி ராஜபக்சவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும், டொரிங்டன் பகுதியில் உள்ள வீடு தொடர்பாக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த வீட்டை வாங்குவதற்கான நிதி எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு உடனடி விளக்கம் கோரியுள்ளது. ‘சிரிலியா’ கணக்கு தொடர்பான நீண்டகால விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சொத்து சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தின் மூலம் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கம் அளிக்கப்படும் வரை, குறித்த வீட்டின் உரிமையை வேறு யாருக்கும் மாற்ற முடியாத வகையில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உரிய விளக்கத்தை வழங்கத் தவறினால், சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அந்தச் சொத்தை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய மற்றொரு முக்கிய அம்சமாக, சொத்துக்கள் குறித்த விசாரணையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் குறைபாடுகள் உள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த விசாரணைக்கு இணங்க, முறையான மற்றும் முழுமையான தகவல்களை கொண்ட பிரமாணப் பத்திரத்தை வழங்குமாறு பலமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 49ஆம் பிரிவுக்கு இணங்க, 14 நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு மார்ச் 23ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் துல்லியமான தகவல்கள் வழங்கப்படாவிட்டால், அது தகவல் மறைப்பாகக் கருதப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
இந்த விவகாரம், நாட்டின் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், உயர்மட்ட நபர்களின் சொத்து விவரங்கள் தொடர்பான வெளிப்படைத்தன்மை மீண்டும் விவாதத்துக்குரிய விடயமாக மாறியுள்ளது.
